தேனி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி, மகன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தமது உறவினரான ஓர் பெண்ணுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்து கொடுப்பதற்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த நபர் சின்னாளப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது நிலத்தை விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அந்த பெண்ணுக்கு தெரிந்த மற்றொரு நபர் உடன் இருந்துள்ளார்.
அப்போது இரண்டு நபர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. மேலும் இடத்தை விற்கும் முயற்சியில் இருந்த பெண்ணுக்கு தெரிந்த நபர், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த நபரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதில் அவரது மனைவிக்கும், அங்கு வந்து சென்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருநாள் அந்த நபருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை அறிமுகமான மற்றொரு நபர் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர் வேலைக்குச் சென்றிருந்த நேரங்களில் அவரது மனைவியும், அவருக்கு பணிக்கு பரிந்துரைத்த நபரும் நெருங்கிப் பழகியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயம் தெரிய வரவே, தமது மனைவியையும் நண்பரையும் அவர் கண்டித்துள்ளார். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் இருவரும் தேனிக்குச் சென்று தனியே வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
கொலை வழக்கு: இந்நிலையில் இருவரும் தேனியில் இருப்பதைத் தெரிந்து கொண்ட அப்பெண்ணின் கணவர், தமது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரை கொலை செய்யும் நோக்கத்தோடு தனது மகன் மற்றும் உறவினர் ஒருவருடன் அந்த நபர் தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மூவரும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்த தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: வேலூர்: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: சிசுவின் இதயதுடிப்பு நின்றதாக அதிர்ச்சி தகவல்!
இந்த சம்பவம் குறித்து, கொலை குற்றத்துக்கு ஆளான நபரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 2020 நவம்பர் 23 ஆம் தேதி, அப்பெண்ணின் கணவர், அவரது மகன், உறவினர் ஆகிய மூவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையானது தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிவு பெற்று மூவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பு:
இந்நிலையில் முதல் குற்றவாளியான, புகார் அளித்த பெண்ணின் கணவருக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன்கீழ் ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவு 302 இன் கீழ் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இதேபோல் அவரது மகன் மற்றும் உறவினருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார்.