சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (65) - ஈஸ்வரி (60) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகனுக்கு கடந்த மாதம் ஜனவரி 26ஆம் தேதி அன்று மயிலாப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது.
அப்போது, திருமணத்திற்கு வந்த நபர்கள் மொய் வைத்த இரண்டு லட்சம் பணம், 3 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பரிசு பொருட்கள் அடங்கிய கைப்பைகள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருமணம் மண்டபத்தில் வைக்கப்பட்ட பணம், தங்க நகை பரிசு பொருட்களை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிசிடிவி காட்சியில் சிக்கிய ஆதரங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த அடையாளம் தெரியாத நபர் விழுப்புரம் மாவட்டம் கிழக்கு சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (53) என்பது தெரியவந்துள்ளது.
![பறிமுதல் செய்யப்பட்டவை , கைது செய்யப்பட்டவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23510118_stole.jpg)
இதையடுத்து, அவரை கைது செய்த தனிப்படை போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஜனவரி 26ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் மொய் பணம், நகை உள்ளிட்ட பரிசு பொருட்களை திருடிவிட்டு, பிப்ரவரி 3ஆம் தேதியன்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திலும் மொய் பணத்தை புருஷோத்தமன் திருடியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து திருமண மண்டபத்தில் திருடிய 2 லட்சம் பணம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருடிய பணம் ரூ.57 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் கொலை: கணவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை!
மேலும், புருஷோத்தமனிடம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் திருமணம் மண்டபங்களில் நுழைந்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதும், இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு என ஐந்து வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புருஷோத்தமன் மீது வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.