உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில், "சிக்கன் பிரியாணிக்குப் பதில் பீப் பிரியாணி வழங்கப்படும்" என்ற எழுத்துப்பிழையுடன் வெளியான அறிக்கை ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தின் (Aligarh Muslim University) சுலேமான் ஹாலில் மாட்டிறைச்சி பிரியாணி ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்படும் என்ற பொருள்படும்படியான ஒரு அறிவிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், உணவு வழங்கும் மெனுவில் எந்த மாற்றத்தையும் வெளியிடவில்லை எனவும், மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பு குறித்த தவறுக்கு எழுத்துப்பிழை தான் காரணம் எனவும் பல்கலை நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் பீப் பிரியாணி:
அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு என மொத்தம் 20 விடுதிகள் அமைந்துள்ளன. இங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு, விடுதி நிர்வாகம் சார்பில் தினமும் மூன்று வேளையும் உணவு தயார் செய்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அங்கு செயல்படும் விடுதிகளின் உணவு மெனு என்று ருறிப்பிடப்பட்ட ஒரு தகவல் ஆங்கிலத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
![அலிகார் பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்தின் அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/23506864_aaa.jpg)
சர்ச்சையான நோட்டீஸ்:
அதில், 'இந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு மெனு மாணவர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிக்கன் பிரியாணிக்கு பதிலாக, நாங்கள் மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவோம். இந்த மாற்றம் விடுதியில் தங்கியிருக்கும் ஏராளமான மாணவர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் தங்களுக்கு மகிழ்ச்ச்சியை அளிக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மியின் இலவச திட்டங்களை பாஜக அரசு தொடருமா?
பல்கலை நிர்வாகம் விளக்கம்:
இதுகுறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் முகமது வாசிம் அலி (AMU Proctor) கூறியதாவது, " பல்கலைக்கழக விடுதிகளில் வழங்கப்பபட்டு வரும் உணவு மெனுவில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தட்டச்சுப் பிழை உள்ளது. உணவு மெனுவில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போதுள்ள மெனுவின் படியே உணவு வழங்கப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமலில் உள்ள பசுவதை தடுப்புச் சட்டத்தின் படி (1955) , பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சி விற்பனை செய்வது மற்றும் அதனை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பசுக்களுக்கும், அவற்றின் கன்றுகளுக்கும் உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்துவதும் உ.பியில் குற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தச் சட்டம் 2020 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பிறகு, பசுவதைக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.