லண்டன்:விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபன்னா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை ஜெர்மனியின் ஹெண்ட்ரிக் ஜெபன்ஸ், கான்ஸ்டன்டின் பிரான்ட்சென் ஜோடியிடம் தோல்வியை தழுவியது. இரண்டு சுற்றில் தொடக்கம் முதலே தடுமாறிய ரோகன் போபன்னா, மேத்யூ எப்டன் இணை 6-க்கும் 3 மற்றும் 7-க்கும் 6 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் ஹெண்ட்ரிக் ஜெபன்ஸ், கான்ஸ்டன்டின் பிரான்ட்சென் ஜோடியிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
ஆரம்பத்தில் இருந்து அதிரடி காட்டி வந்த ஹெண்ட்ரிக் ஜெபன்ஸ், கான்ஸ்டன்டின் பிரான்ட்சென் ஜோடி, ரோகன் போபன்னா இணைக்கு புள்ளிகள் வழங்காமல் இருக்க தேவையான நுட்பத்தை போட்டியில் செலுத்தி கவனமுடன் விளையாடினர். இதனால் ரோகன் போபன்னா, மேத்யூ எப்டன் இணையால் மேற்கொண்டு புள்ளிகளை சேர்க்க இயலவில்லை.
அபாரமாக விளையாடிய ஹெண்ட்ரிக் ஜெபன்ஸ், கான்ஸ்டன்டின் பிரான்ட்சென் ஜோடி இரண்டு செட்களையும் கைப்பற்றி ரோகன் போபன்னா இணையை நேர் செட்டில் வீழத்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபன்னா - மேத்யூ எப்டன் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
அதைத் தொடர்ந்து தற்போதைய விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலும் இந்த ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றிலே தோல்வியை தழுவி வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்கள் நடைபெறும். அதில் ஒன்று தான் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.
இதையும் படிங்க:ஈஸ்வரன் அபார பந்துவீச்சு வீண்..திருச்சியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்! - TNPL 2024