பழனி: ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பிரபலமான முருகன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று (பிப்ரவரி 14) மதுரை திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்து விட்டு, முருகனின் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தனது மகன் ஆதிரா நந்தனுடன் வருகை தந்தார்.
ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணிற்கு, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பவன் கல்யாண் மற்றும் அவரது மகன் அகிரா நந்தன் உச்சிகால பூஜையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், அவருடன் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
![பழனி முருகனை தரிசித்த துணை முதலமைச்சர் பவன் கல்யாண்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/23542871_1.jpg)
இதையும் படிங்க: ”அரசியல் கேள்விகள் வேண்டாம்...” சுவாமிமலையில் முருகனை மனமுருகி தரிசித்த பவன் கல்யாண் பேட்டி! |
பின்னர், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தான் மேற்கொண்டுள்ள ஆன்மிக பயணம் மிகவும் மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தேசமும், தேச மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பழனி முருகனிடமும் வேண்டினேன். பழனியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடமும் பேசி நடவடிக்கை எடுப்பேன். அதே போல், பழனி - திருப்பதி இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆன்மிக ஸ்தலங்களில் அரசியல் குறித்து பேசவேண்டாம், பழனியில் திருப்பதி தரிசனம் தொடர்பான சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்யும் விதமாக, பழனியிலேயே தகவல் மையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில், ஆந்திர அதிகாரிகள் மற்றும் பழனி கோயில் இணைஆணையர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ரோப் கார் மூலம் கீழே இறங்கி மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண். முன்னதாக, நேற்று திருச்செந்தூர் முருகன் மற்றும் சுவாமிமலை முருகன் கோயிலில் பவன் கல்யாண் தனது மகனுடம் சாமி தரிசனம் செய்தார்.