புதுடெல்லி: ஈஷா பவுண்டேஷன் சார்பில் 2006-2014 ஆண்டுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்படுவதாக அனுப்பிய நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து முறையீடு செய்வது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரியில் ஈஷா பவுண்டேஷன் சார்பில் கட்டுமானப்பணிகள் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளிக்கும் படியும், சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பெறும்படியும் 2006-2014 காலகட்டத்துக்கு இடையே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அப்போது ஈஷா பவுண்டேஷன் சார்பில், மத்திய அரசின் வழிமுறைகளின் படி யோகா பயிற்சி மையம் என்பது கல்வி என்ற வகைப்பாட்டில் வருவதால் கல்வி நோக்கத்துக்காக கட்டடங்கள் கட்டும்போது முன்னதாக தடையின்மை சான்று தேவையில்லை என்று கூறப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஷா பவுண்டேஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உரிய நேரத்தில் ஏன் அணுகவில்லை?
இந்த மனு நீதிபதிகள் சூரிய காந்த், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்துள்ள மனு, "எந்த வித விளைவையும் ஏற்படுத்தக் கூடியதாக இல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் முத்திரையை பெறுவதற்காக மட்டும் அதிகாரிகள் மேற்கொள்ளும் செயல்," என்று கூறினர்.
தமிழக அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமனிடம், "கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரியில் இப்போது ஈஷா பவுண்டேஷன் யோகா மற்றும் தியான மையம் கட்டடத்தை கட்டியுள்ளது. அவை சுற்றுச்சூழலுக்கு இணக்கமானவையா? என மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். உரிய நேரத்தில் நீதிமன்றத்தை அணுகுவதற்கு அதிகாரிகளை தடுப்பதாக இருந்தது எது? மிகவும் தாமதமாக மாநில அரசு மனு செய்திருக்கிறது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,"என்று நீதிபதிகள் கூறினர்.
நீதிபதி சூரிய காந்த், "நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொண்டிருக்கிறது. அது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட ஒரே ஒரு வரியில், கழிவு நீர் அகற்றும் ஆலை முறையாக செயல்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக விளக்கம் கேட்கும் நோட்டீஸ் என்பது முழுவதும் தவறானதாகும்.
இடிக்க அனுமதிக்க முடியாது: கழிவு நீர் அகற்றும் பிரிவு மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் விஷயங்களுக்கும் இணக்கமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து அதன் பின்னர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வண்டும். அது ஒரு சிறிய குடில் அல்ல. லட்சகணக்கான சதுர அடியில் உங்கள் கண்களுக்கு முன்பாக எழுப்பப்பட்ட கட்டடமாகும். அந்த கட்டுமானத்தை இடிப்பதற்கு உங்களை அனுமதிக்க முடியாது," என அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
"இப்போது அங்கே யோகா மையம் கட்டப்பட்டுள்ளது. தேவையான சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பெறப்பட்டுள்ளதா?, சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக உள்ளதா? என்பதை மாநில அரசு உறுதிசெய்ய வேண்டும்," என்றும் நீதிபதிகள் கூறினர்.
அப்போது வாதிட்ட தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், "அனுமதிக்காக அவர்கள் விண்ணப்பம் செய்த போது அங்கு கட்டடம் கட்டப்படுவதாக இருந்தது. எனினும் 2012ஆம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்டது. அது சுற்றுச்சூழல் தடையின்மை சான்றுக்கு உட்பட்டது என்று அப்போதே தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் சுற்றுச்சூழல் தடையின்மை சான்றிதழ் தேவையில்லை என்றனர்," என்றார்.
அப்போது நீதிபதிகள், "அந்த பயிற்சி மையமானது கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தின் வகைப்பாட்டில் வருவதால் மத்திய அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் தடையின்மை சான்று தேவையில்லை என்று அதிகாரிகள் ஈஷா பவுண்டேஷனிடம் கூறியுள்ளனர்," என்றனர். மேலும் மாநில அரசின் வழக்கறிஞரிடம், "இரண்டு வருடங்களாக உச்ச நீதிமன்றத்தை நீங்கள் ஏன் அணுகவில்லை என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?,"என்று நீபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர்,"இந்த விஷயம் இரண்டு துறைகளுக்கு இடையே இருந்தது. இது என்னுடைய கவனத்துக்கு வந்த போது, இதனை உடனடியாக தீர்வுக்கு கொண்டு வந்துள்ளேன். அதனால்தான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது," என்றார்.
அபாயம் இல்லை: நீதிபதி சூரிய காந்த்,"இப்போது யோகா மையம் கட்டப்பட்டு விட்டது. இந்த கட்டுமானம் மனிதர்கள் வாழ்வதற்கு அபாயம் விளைவிக்கக் கூடியது என்று நீங்கள் சொல்லவில்லை. வேறு எந்த ஒரு அபாயமும் இருப்பதாக கூறவில்லை. அங்கு கழிவு நீர் அகற்றும் பிரிவு உள்ளதா? இயற்கையான ஒளி, காற்று, குறிப்பிடத்தக்க அளவு பசுமை பரப்பளவு உள்ளதா? அதற்கெல்லாம் இணக்கமாக சுற்றுச்சூழல் வழிமுறைகளுக்கு ஏற்ப உள்ளதா? என்பதை உறுதி செய்வதில்தான் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். யார் இதையெல்லாம் கடைப்பிடிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து இந்த விஷயங்களுக்குள் நீங்கள் அனைத்து சந்தேகங்களையும் எழுப்ப வேண்டும்," என்றார்.
ஈஷாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி,"பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த விஷயம் குறித்து நீதிமன்றம் இரண்டு வாரம் கழித்து விசாரிக்கலாம். எங்களிடம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகள் உள்ளன. இதர அனுமதிகளும் உள்ளன. அந்த இடத்தில் 20 சதவிகிதம் மட்டுமே கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. 80 சதவிகிதம் பசுமைப் பரப்பாகவே விடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறந்த யோகா மற்றும் தியான மையமாக இது உள்ளது. நான் அதற்கான புகைப்படங்களை சமர்பிக்கின்றேன்," என்றார். இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை இரண்டு வாரம் கழித்து விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.