புதுடெல்லி: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையின்போது முடக்கப்பட்ட அவரது சொத்துகளை விடுவிக்க கோரி, ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபர் மரணம் அடைந்த காரணத்தால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாலேயே அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்று அர்த்தமில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், விடுவிக்கக் கோரும் சொத்துகள், அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை காலத்தில் சட்ட விதிமுறைகளை மீறி பெறப்பட்டவை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை விடுவிக்க கோரிய மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரான ஜெ.தீபா தரப்பு வழக்குரைஞர் எம்.சத்ய குமார்," ஜெயலலிதாவின் முடக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் அவர் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை. அத்துடன், ஜெயலலிதாவுக்கு அவரது அம்மா அளித்த பரிசுப் பொருட்களும் விடுவிக்கப்பட வேண்டும். இவை, ஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்ட காலத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை" என்று வாதிட்டார்.
அதற்கு, "எந்தெந்த பொருட்கள் எந்தெந்த காலத்தில் வாங்கப்பட்டவை என்று நீங்கள் எப்படி தீர்மானிக்கிறீர்கள்? என்று எங்களுக்கு தெரியவில்லை"என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் காரணமாக அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க கோரி அவரது சகோதரரின் மகளான ஜெ.தீபா தாக்கல் செய்ய மனுவை கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் கடந்த மாதம் ஜனவரி 13 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில்,"எனது அத்தை (ஜெயலலிதா) மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு விசாரணை நடைமுறைகள், 2016 டிசம்பர் மாதம் அவரது மரணத்துக்கு பின் கைவிடப்பட்டது. எனவே, வழக்கு விசாரணையின்போது புலனாய்வு அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்ட அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எங்களிடம் திருப்பி தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.' என்று கோரியிருந்தார்.
மேலும், 'ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளுக்கு உரிமை கோரவும், அவற்றை நிர்வகிக்கவும் சட்டரீதியான வாரிசுதார்களில ஒருவராக என்னை அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 மே மாதம் 27ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின், சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீதான சட்டநடவடிக்கைகள் கைவிடப்படுவதாக 2017 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, அதன் பிறகு அவரை குற்றவாளி கருத முடியாது. எனவே, முடக்கப்பட்ட அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகள் சட்டப்படி எங்களிடம் திருப்பி தரப்பட வேண்டும்' என்றும் தமது மேல்முறையீட்டு மனுவில் ஜெ.தீபா குறிப்பிட்டிருந்தார்.
குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் மரணம் அடைந்ததன் காரணமாக, அவர் மீதான வழக்கின் விசாரணை கைவிடப்பட்டதாலேயே அவர் விடுதலை செய்யப்பட்டதாக அர்த்தமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.