பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை இந்திய அணி வென்று உள்ளது. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி பதக்க வென்றது.
ஏறத்தாழ 41 ஆண்டுகளுக்கு பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது. அதன்பின் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் இந்திய ஹாக்கி அணி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பை பெற்று உள்ளது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956 ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.
தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக ஒலிம்பிக் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அதன்பின் 1964 ஆம் ஆண்டு மீண்டும் ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றது. தொடர்ந்து 1968 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெணகலப் பதக்கம் வென்றது.
கடந்த 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கம் வென்றது. அதன்பின் 40 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணியால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஏறத்தாழ 41 ஆண்டுகால தாகத்தை 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்று தீர்த்து வைத்தது. அதன் பின் தற்போது 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று உள்ளது.