கான்பூர்:இந்தியா - வங்கதேசம் இடையே கான்பூரில் நடைபெற்று வரும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தான் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் இன்னிங்சில் வங்கதேச வீரர் கலீல் அகமதை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா இந்த மைல்கல்லை படைத்தார்.
3வது இந்திய வீரர்:
வங்கதேச வீரர் கலீல் அகமது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் விக்கெட் எண்ணிக்கை 300ஐ எட்டியது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட் மற்றும் 3 ஆயிரம் ரன்களை கடந்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார்.
இதற்கு முன் கபில் தேவ் மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட் மற்றும் 3 ஆயிரம் ரன்கள் அடித்த 11வது வீரர் ரவீந்திர ஜடேஜா. அதேநேரம், மற்றொரு அரிய சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
ஆசியாவிலேயே முதல் வீரர்:
ஆசிய கண்டத்திலேயே அதிவேகமாக 300 விக்கெட் மற்றும் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். 300 விக்கெட், 3 ஆயிரம் ரன்கள் சாதனையை தனது 73வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
ஒட்டுமொத்த அளவில் இங்கிலாந்து வீரர் இயான் பொத்தம் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 72 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதுதவிர சர்வதேச கிரிக்கெட் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய 7வது இந்திய வீரர் ஆவார் ஜடேஜா. மொத்தம் 17 ஆயிரத்து 428 பந்துகள் வீசி ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார்.
அஸ்வின் முதலிடம்:
இந்த வரிசையில் தமிழக வீரர் அஸ்வின் 15 ஆயிரத்து 636 பந்துகளே வீசி, அதில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி ஜடேஜாவுக்கு முன்னால் நிற்கிறார். இந்திய அணியில் அனில் கும்பிளே (619 விக்கெட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (524 விக்கெட்), கபில் தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன் சிங் (417 விக்கெட்), இஷாந்த் சர்மா (311 விக்கெட்), ஜாகீர் கான் (311 விக்கெட்) ஆகியோர் ஜடேஜாவுக்கு முன்னதாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான்கள் ஆவர்.
இதையும் படிங்க:233 ரன்களில் சுருண்ட வங்கதேசம்! புது சாதனை படைத்த ஜடேஜா! - India vs Bangladesh 2nd Test