சென்னை: 2025-26ம் கல்வியாண்டில் ஏஐசிடிஇ அனுமதி பெற அபராதத்துடன் ஜனவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டு தோறும் மாணவா் சோ்க்கைக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலம் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும்.இதற்கான வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதனைத் தாெடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும். வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும், மாணவா் ஆசிரியர் நியமன எண்ணிக்கையும் முக்கியமாக உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனுமதிக்கு அளவிற்கே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்களை சேர்க்க முடியும்.
2025-26 ம் கல்வியாண்டில் ஏஐசிடிஇ அனுமதியை பெறுவதற்கு தொழில்நுட்ப படிப்புகளில் இளங்கலை, முதுகலைப் படிப்பிற்கு அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து https://www.aicte-india.org என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். பொறியியல் கல்லூரிகள் அனுமதிக்கான காலக்கெடு கடந்த நவம்பர் 25 ந் தேதி தொடங்கியது. டிசம்பர் 9 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்தது. எனினும் அபராதத்துடன் ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஞானசேகரனால் மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் பல்கலை குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்... உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த பின்னர் உயர்மட்டக்குழு ஆய்வு செய்யும் எனவும், ஆசிரியர்களை உரியக் கல்வித் தகுதியின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.மேலும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனம் மோசடியாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 295 பொறியியல் கல்லூரிகளில் 700 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 295 பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆதார் எண், பான் எண் போன்றவை வாங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 271வது சிண்டிகேட் கூட்டம், கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், போலி பேராசிரியர்களை கணக்கு காண்பித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டு, கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிண்டிக்கேட் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்குள் உள்ள எந்தவொரு கல்லூரியிலும் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கற்பிப்பதில் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், போலியான தகவலை வழங்கிய கல்லூரிகளுக்கு எதிராக (குற்றவியல் நடவடிக்கை உட்பட) கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போலியாக ஆசிரியர்களை நியமனம் செய்த பொறியியல் கல்லூரியின் விபரத்தையும் உயர்கல்வித்துறை வெளியிடாத நிலையில், 2025-26 ம் ஆண்டு பொறியியல் கல்லூரி பாடப்பிரிவு மற்றும் இடங்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.