வேலூர்: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெண்ணிண் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக கூறப்படுகிறது.
இதனால், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு கர்ப்பிணி பெண் மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பெண், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் (பிப்ரவரி 06) கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் இண்டர்சிட்டி விரைவு ரயிலில் மகளிருக்கான பெட்டியில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி
இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். மகளிருக்கான பெட்டியில் ஏறியதால், அந்த பெண் அவரிடம் முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அந்த நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்பெண் கழிவறைக்குள் செல்லவும் முயற்சித்துள்ளார்.
தொடர்ந்து, கர்ப்பிணி சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்றும் பாராமல் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகத்தினர் 5 பேர் மீது போக்சோ வழக்கு! |
இதனையடுத்து அந்த நபர் காட்பாடி வந்ததும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் போலீசார், கர்ப்பிணி பெண்ணை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜ், காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த நேரத்தில் தப்பித்து ஓட முயற்சித்த ஹேமராஜ் காலில் அடிபட்டுள்ளது. பின்னர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.