சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை: அண்ணா பல்கலைக்கழக மாணவி டிச.23ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில், "இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,"என கூறியிருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முனவந்து வழக்கை விசாரிக்க முடியாது எனவும், தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வு தெரிவித்தது. மேலும், வழக்காக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் "மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும்,"என குறிப்பிட்டிருந்தனர்.
பல புகார்கள் உள்ளன: இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஐரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயண், "முதலில் ஞானசேகரை கைது செய்து பின்னர் விடுவித்த காவல்துறையினர் அழுத்தம் காரணமாக மீண்டும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்வாக்கான நபராக உள்ளார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஞானசேகர் மீது இந்த வழக்கு மட்டும் தான் உள்ளது என காவல்துறை ஆணையர் கூறுகிறார். ஆனால் அவர் மீது பல புகார்கள் உள்ளன. அது குறித்து விசாரிக்க வேண்டும்,"என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஞானசேகரனால் மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் பல்கலை குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்... உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்,"உடனடி கைது நடவடிக்கை எடுத்த போலீசாரை பாராட்டாமல் மூன்றாவது நாள் சிபிஐ விசாரணை கோரி விளம்பரத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை உடனடியாக துவங்கப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில்தான் ஞானசேகர் அடையாளம் காணப்பட்டார். விசாரணையின் போது தப்பி ஓட ஞானசேகரன் முயற்சித்தார். காவல்நுறையினர் துரத்திய போது கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதால் கட்டுப் போடப்பட்டுள்ளது. ஞானசேகரன் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் கிடையாது,"என தெரிவித்தார்.
எஃப்ஐஆர் எப்படி வெளியானது?: இதையடுத்து வழக்கு குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "விசாரணை நிலுவையில் இருக்கும் போது ஆணையர், 'ஒருவர் தான் குற்றவாளி,' என எப்படி முடிவுக்கு வந்தார்? முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு யார் பொறுப்பு? எப்படி வெளியானது? பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?,'' என கேள்வி எழுப்பினர்.
மேலும், "புகாரளித்த மாணவியை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா பல்கலை வளாகத்தில் சுற்றி வருகிறார். அது குறித்து காவல்துறை விசாரித்ததா? அவருக்கு காலில் கட்டுப் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா?இன்னும் எத்தனை சம்பவங்கள் கவனத்துக்கு வராமல் உள்ளன.
கல்வி நிறுவனங்களை நம்பி தான் பெற்றோர் குழந்தைகளை அனுப்பி வைத்துள்ளனர். எப்.ஐ.ஆர். வெளியிட்டதால் பெற்றோர் அச்சம் கொள்வர். இதுபோன்று பாதிக்கப்பட்ட மாணவிகள் இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது? காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,"என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.