தூத்துக்குடி: "பதவியை காப்பாற்றிக் கொள்ளவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 நாள் விரதம் இருக்கிறார்," என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
எட்டயபுரம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வெளியில் வந்து புகார் தெரிவித்ததற்கு அவருக்கு முதலில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வரவேண்டும்.
புகார் கொடுக்க வருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் காரணமாக தான் இப்போதெல்லாம் புகார் அளிக்க பலரும் முன்வருகிறார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதற்கு சமூக நலத்துறை, காவல்துறை இணைந்து செயல்படுகிறது. பெண்களின் நனுக்காக திட்டங்களை முதலமைச்சர் உருவாக்கி தருகின்றார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றம் செய்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படமாட்டாது. ஆனால், திமுக ஆட்சியில் பல்கலைக்கழக மானவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரை, நான்கு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
வித்தை காட்டும் அண்ணாமலை:
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த போது, டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி, அந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு. எடப்பாடி பழனிச்சாமி பாதம் தாங்கியாகவே இன்றும் இருக்கின்றார். பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து பத்திரிகையாளர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு, கயிற்றால் அடித்துக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: சாட்டையடி போராட்டம் நடத்திய அண்ணாமலை - 7 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்தார்
அவர் பதவியை தூக்கப் போகிறார்கள் என்று கூறுகின்றார்கள். அதற்காகத்தான், 48 நாள் விரதம் இருக்கின்றார். பாஜக ஆட்சியில் மணிப்பூரில் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள், துன்பப்படுத்தப்பட்டார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு அரணாக இருக்கின்றார்.
மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுக இல்லை. அனைவரும் அவர் திமுகவினர் என்று பொய் பரப்புரை செய்கின்றனர். முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி தூத்துக்குடியில் திட்டமிட்டபடி 29, 30 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெறும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.