லக்னோ:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.27) இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.
நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி, 3ல் தோல்வி கண்டு கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேநேரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7ல் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளும் முந்தைய ஆட்டத்தில் முறையே ராஜஸ்தான் அணி மும்பையையும், லக்னோ அணி சென்னையையும் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளன. தொடர் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் லக்னோ அணிக்கு உள்ளூர் சூழல் சாதகமாக இருப்பதால் அவரகள் கை சற்று ஓங்கியே காணப்படுகிறது.
அதனை சமாளித்து வெற்றிக் கொடியை நாட்ட ராஜஸ்தான் அணியும் முயற்சிக்கும். இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் லக்னோ 1-ல் வெற்றியும், ராஜஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.