தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பை; இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு மழை பொழிந்த பிசிசிஐ! - T20 World Cup - T20 WORLD CUP

Rs 125 Crore Prize Money: டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

T20
டி20 உலகக்கோப்பை (Credits - ANI)

By PTI

Published : Jun 30, 2024, 8:11 PM IST

டெல்லி:டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பாக ஜெய் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் இந்திய அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மிகவும் த்ரில்லிங்காக நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி உச்சி முகர்ந்துள்ளது.

இதற்கு சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களும், குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் என அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதேநேரம், இன்ப வெள்ளத்தில் மிதந்த இந்திய ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஷாக் சம்பவங்களும் காத்திருந்தன.

டி20 உலகக்கோப்பை கனவை வென்ற ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அடுத்தடுத்து அறிவித்ததால் ரசிகர்கள் மீளா அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான ராகுல் டிராவிட் டி20 உலகக்கோப்பையோடு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐபிஎல் தொடரில் கடும் விமர்சனத்திற்குள்ளான ஹர்திக் பாண்டியா இறுதிப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் த்ரில் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வகித்தார்ப் என்றால் அது மிகையல்ல. அதேபோல், சூர்யகுமார் யாதவ்வின் கேட்ச்சும் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது. இந்த நிலையில்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரசிகர்களுக்கு பரிசு மழையைப் பொழிந்துள்ளது.

இதையும் படிங்க:2007ல் தோல்வி.. 2024ல் வெற்றி! வீழ்ந்த இடத்தில் வென்று சாதித்த ராகுல் டிராவிட்!

ABOUT THE AUTHOR

...view details