பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையார் துபாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் கலந்து கொண்டு விளையாடினார். முதல் நாள் தகுதிச் சுற்றின் முடிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் 2 சுற்றுகளில் 15வது இடத்தை பிடித்தார்.
அதில் குறிப்பாக இரண்டாவது சுற்றில் மொத்தம் உள்ள 25 டிராப்களில் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி பிரித்விராஜ் தொண்டைமான் அசத்தி இருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை.30) இரண்டாவது நாளாக துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவின் தகுதிச் சுற்றில் பிரித்விராஜ் தொண்டைமான் தொடர்ந்து விளையாடினார்.
மூன்று சுற்றுகள் முடிவில் பிரித்விராஜ் தொண்டைமான் 30வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் 4வது சுற்றில் மொத்தம் உள்ள 25 டிராப்களையும் சுட்டு வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 5 இடங்கள் முன்னேறிய பிரித்விராஜ் தொண்டைமான் 25வது இடத்தை பிடித்தார். அதேபோல் கடைசி சுற்றிலும் 25 டிராப்களை பிரித்விராஜ் தொண்டைமான் வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும் அவரால் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர முடியவில்லை. முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே துபாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவர். ஆனால் பிரித்விராஜ் தொண்டைமான் 5 சுற்றுகள் முடிவில் 118 புள்ளிகள் பெற்று 21வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
அதேபோல், ஆடவர் துடுப்பு போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ்க் பன்வரும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார். 500 மீட்டர் துடுப்பு போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் பந்தைய தூரத்தை 1:42.28 விநாடிகளில் கடந்து 5வது இடத்தை பிடித்தார். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்று வாய்ப்புக்கு தகுதி பெறுவர். 5வது இடத்தை பிடித்த பல்ராஜ் தன்வர் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
அதேநேரம் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் டிராப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் இரண்டு சுற்றுகளில் முறையே 22 புள்ளிகளை பெற்று இருந்த ஸ்ரேயாசி சிங், மூன்றாவது சுற்றில் 25க்கு 24 டிராப்புகளை சுட்டு வீழ்த்தி தரவரிசையில் 22வது இடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து சுற்று ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.
இதையும் படிங்க:பாரீசில் புயல் எச்சரிக்கை! ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா? - Paris Olympics Storm Alert