நீலகிரி: நீலகிரியில் சிறுத்தை தாக்கியதில் தேயிலைத் தோட்ட பணிக்காகச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காடு பகுதி முக்குருத்தி, அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதி சிறுத்தை, புலி, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, கரடி போன்ற விலங்குகளின் நடமாட்டமானது எடக்காடு அருகேயுள்ள அறையட்டி கிராமம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3) அறையட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் தேயிலைத் தோட்டத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுத்தை இளைஞரைத் தாக்கியதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு!
இதற்கிடையே, இளைஞரின் அலறல் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் அவர் சென்ற தேயிலைத் தோட்ட பகுதிக்குச் சென்று பார்த்த போது, சிறுத்தை தாக்கி சதீஷ் உயிரிழந்து கிடந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இளைஞரின் உடலை மீட்ட அப்பகுதியினர், இதுகுறித்து வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மக்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்த அப்பகுதி மக்கள், வனத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து, சிறிது நேரம் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வழி விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.