கோயம்புத்தூர்: கேரளா மாநிலம் கொச்சி இருந்து கோவை கணபதி பகுதிக்கு உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரியின் டாங்கர் மட்டும் கவிழ்ந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது.
பின்னர், அதிலிருந்து வாயு வெளியேறிய நிலையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அதனை சரி செய்து கணபதி பகுதியில் உள்ள பாரத் நிறுவன மையத்திற்கு பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால், மீட்புப் பணிகள் நிறைவடையும் வரை உப்பிலிபாளையம் மேம்பாலம் வழி செல்லவிருந்த வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன. மேலும், அதிகாலையில் இருந்து மதியம் சுமார் 2 மணி வரை மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதையும் படிங்க: கோவை மேம்பாலத்தில் கவிழ்ந்த கேஸ் டாங்கர்! மீட்பு பணி முடிந்து அகற்றம்!
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் என பல்வேறு உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். நூற்றுக்கணக்கான போலீசார், போக்குவரத்து போலீசார் இப்பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணிகளிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி மாநகராட்சி பணியாளர்களும், பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இச்சம்பவம் நேற்று கோவை மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
ஓட்டுநர் கைது:
இச்சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலானாய்வு போலிசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மீது (BNS 281) ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், (BNS 110) மரணம் விளைக்கக்கூடிய விதத்தில் வாகனம் ஓட்டுதல், (BNS 324) நான்கு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுதல், 9B வெடிபொருள் சட்டம், 23 பெட்ரோலியம் சட்டம், 8 R/W 15 சுற்றுச்சூழல் சட்டம், 184 மற்றும் 190 மோட்டார் பாதுகாப்பு சட்டம் என எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.