சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளிவருகிறது. அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் பணிகளில் இயக்குநர் பாலா ஈடுபட்டுள்ளார். பட புரோமோஷனின் ஒரு பகுதியாக தனியார் யூடியூப் சேனலுக்கு பாலா அளித்த பேட்டியில் 'சேது' திரைப்படம் பற்றி மறைந்த பாலு மகேந்திரா கூறியதைப் பற்றி தெரிவித்துள்ளார்.
பாலா கூறியதாவது, ”அவர் முதல் முறை படம் பார்க்கும் போது எங்களுடன் சக திரைப்பட பணியாளர்களும், நிறைய நண்பர்களும் இருந்தார்கள். அதனால் சபைக்காக படம் பார்த்துவிட்டு நல்ல வேளை உன் படத்தைப் பார்த்துவிட்டேன். ஒருவேளை பார்க்காமலே இறந்து போயிருப்பனோ என்னவோ, என்று சொன்னார். உடன் இருந்த அனைவரும் அவர் சொன்னதைக் கேட்டு என்ன இப்படி சொல்லிட்டாரு என மகிழ்வாக இருந்தார்கள்.
அதன் பிறகு என்னை தனியாக அலுவலகத்திற்கு அழைத்தார். அங்கு போய் பார்த்த போது, முதல் வார்த்தையே பாலா ஏன்டா உனக்கு இப்படி ஒரு குரூர புத்தி! பாவம் படிக்கிற ஒரு பொண்ணு, அப்பாவியான பொண்ணு, அவளை அதே காலேஜ்ல இருக்குற ரவுடிப்பய மூலமா லவ் பண்ண வச்சிட்டு, அதுவும் மிரட்டி லவ் பண்ண வச்சி, அப்புறம் ஒரு விபத்துல அவனுக்கு ஏதோ ஆகி அந்த பொண்ணோட வாழ்க்கைய கெடுத்து, அந்த பொண்ணுக்கு ஏற்கனவே ஒரு முறைப்பையன் ஒருத்தன் இருக்கான்.
அப்படி ஒன்னு இருக்கும்போது அந்த பொண்ண வாழ வைக்குறதுதானடா சரி. இப்ப அவன் தான் வாழ்க்கையையும் கெடுத்து, அந்த பொண்ணு வாழ்க்கையும் கெடுத்து, அந்த இன்னொரு பையன் வாழ்க்கையும் கெடுத்து, கடைசில திரும்ப பைத்தியக்காரனாவே கொண்டு போய் சேர்க்கிறியே, எப்படி உனக்கு இப்படிலாம் குரூரமாக சிந்திக்க வருது. அந்த பெண் கதாபாத்திரம் நீ பெத்த புள்ள, நீயே கழுத்த நெருச்சி கொன்னுருவியா? ஏன் இப்படி நடந்துக்குற” என ரொம்பவே காட்டமாக பேசினார்.
இதையும் படிங்க:ஒபாமாவிற்கு 2024 இல் பிடித்த இந்திய திரைப்படம் இப்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில்...
அதற்கு பாலா, “நான் உங்க அளவுக்கு மென்மையானவன் இல்லை. எனக்கு இப்படி தான் தோணுது. எனக்கு தெரிஞ்சததான நான் பண்ண முடியும். உங்கள மாதிரி படம் எடுக்க தான் நீங்க இருக்கிங்களே நான் எதுக்கு?” என பதில் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாலு மகேந்திரா எதுவும் பதில் பேசவில்லை என்றார்.
தொடர்ந்து அந்த நேர்காணலில் தான் இவ்வாறு படங்கள் எடுப்பதற்கு சமூகத்தில் நிகழும் தவறுகள் என் கண்ணில் படுவதுதான் காரணம். அதனை தனிப்பட்ட ரீதியாகவோ, சட்டரீதியாகவோ என்னால் கேள்வி கேட்க முடிவதில்லை எனவும், அத்தகைய சமூக குரூரங்களைப் பார்த்து அழுதுவிட்டு போவதில் எந்த நியாயமும் இல்லையே, என்னிடம் இருக்கும் சினிமா என்னும் மீடியாவின் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்பது தான் அதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.