கரூர்: கரூர் மாநகராட்சி தான்தோன்றி மலைப்பகுதியில் வசித்து வரும் திரைப்பட நடனக் கலைஞர் குணா சுப்பிரமணியன் முதல் முறையாக திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ’சீசா’ (seesaw) நேற்று (ஜன.04) தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நிசாந்த் ரூசா, அறிமுக நாயகி பாண்டினீ குமார், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சேரன் குமார் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். கரூரைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ நிபுணர் செந்தில் வேலன் கதை எழுதி, தயாரித்துள்ள ‘சீசா’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலையரங்கம் திரையரங்கில் நேற்று ஒரு நாள் மட்டும் வெளியிடப்பட்ட சீசா திரைப்படத்தின் முதல் காட்சியை காண்பதற்கு ஏராளமான திரைப்பட ரசிகர்கள் வருகை தந்தனர். இதனைத்தொடர்ந்து திரையரங்க வாசலில் காத்திருந்த திரைப்பட இயக்குநர் குணா சுப்பிரமணியம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் ஆண்ந்த கண்ணீர் வடித்தார்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இயக்குநருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இதனையடுத்து சீசா திரைப்பட இயக்குநர் குணா சுப்பிரமணியன் ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல் முறையாக வெள்ளித்திரையில் எனது திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து கரூர் நகரில், குறிப்பாக சொந்த ஊரில் திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னைப் போன்ற கிராமப்புறத்தில் இருந்து சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு உள்ள ஒவ்வொரு திரைப்பட கலைஞருக்கும் இது தன்னம்பிக்கையை அளிக்கும் வகையில், ரசிகர்களின் வரவேற்பும் ஆதரவும் தன்னை உற்சாகப்படுத்தி இருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ள காரணத்தினால் தனது சொந்த ஊரில் ஒரு நாள் மட்டுமே கலையரங்கம் திரையரங்கில் திரைப்படம் வெளியாகி உள்ளது. எனினும், நான்கு காட்சிகளுக்கும், ரசிகர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு அளித்தால், தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் திரைப்படத்தை திரையிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தயாராக இருப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க: ”எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்” - மாமனாருக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்! - SIVAKARTHIKEYAN
மேலும் ரசிகர்கள் விமர்சனம் குறித்து பேசிய இயக்குநர் குணா சுப்பிரமணியம், ”கைப்பேசி மூலம் ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் கேம்களில் பணம் செலுத்தி நேரத்தை செலவிடும் இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள் மனநல பாதிப்புக்கு தள்ளப்படுவதால் பாதிக்கப்படும் குடும்பம் என சமூக பிரச்சனைகளை த்ரில்லர் கிரைம் திரைப்படமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்” என கூறியுள்ளார்.