பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று (ஆக.7) 12வது நாள் இந்தியாவிற்கு மோசமான நாளாக அமைந்தது. பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை அதிகரித்ததன் காரணமாக இறுதிச் சுற்றில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் மல்யுத்தத்தில் தங்கத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்தியர்களின் கனவு கலைந்தது. ஆனால் இன்று (ஆக.8) 13வது நாளில் நீரஜ் சோப்ரா மற்றும் இந்திய ஹாக்கி அணி மீது பதக்க எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் இந்தியப் போட்டிகளின் அட்டவணையை காணலாம்
கோல்ப்:பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனைகள் அதிதி அசோக் மற்றும் தீக்சா தாகர் மதியம் 12:30 மணிக்கு களம் காணுகின்றனர். கோல்ப் பெண்களுக்கான தனிநபர் ஸ்ட்ரோக் பிளே இரண்டாவது சுற்றில் இருவரும் பங்கேற்கின்றனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த அதிதி அசோக் இந்த முறை பட்டம் வெல்வார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் ரெபெசேஜ் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி பிற்பகல் 02:05 மணிக்கு கலந்து கொள்கிறார்.
மல்யுத்தம்:ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் A குரூப் 57கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா Vs வடக்கு மாசிடோனியா இடையே பிற்பகல் 2:30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. குரூப் ஏ ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய இறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அமன் அமான் மற்றும் மாசிடோனியாவின் எகோரோவ் விளாடிமிர் ஆகியோர் மோதுகின்றனர்.
பெண்களுக்கான ப்ரீஸ்டைல் பி குரூப் 57 கிலோ எடைப்ப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா Vs அமெரிக்கா மோதும் போட்டி பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. குரூப் பி பெண்களுக்கான ப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அன்ஷு அன்ஷுவும், அமெரிக்காவின் ஹெலன் லூயிஸ் மரூலிஸும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஹாக்கி:ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா Vs ஸ்பெயின் ஆகிய அணிகள் இன்று மாலை 5:30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு போக முடியாமல் போனது. தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி வெண்கலம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈட்டி எறிதல்: ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா இரவு 11:55 மணிக்கு கலந்து கொள்கிறார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் குரூப்-பி பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வினேஷ் போகத் விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது - பிடி உஷா! - Paris Olympics 2024