பாரீஸ்:33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.30) 4வது நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முக்கிய ஆட்டங்களில் விளையாடுகின்றனர்.
துப்பாக்கிச் சுடுதல்:
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலில் சர்போஜித் சிங், மனு பாகெர் இணை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுகின்றனர். ஏற்கனவே தனிநபர் பிரிவில் மனு பாகெர் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, ட்ராப் பெண்கள் தகுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்காக ஸ்ரேயாசி சிங் மற்றும் ராஜேஸ்வரி குமாரி விளையாட உள்ளனர். இதில் ட்ராப் பெண்கள் தகுதி சுற்றில் ஸ்ரேயாசி சிங் மற்றும் ராஜேஸ்வரி குமாரி மதியம் 12:30 மணிக்கு விளையாட உள்ளனர்.
அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் மனு பாகெர் மற்றும் சரப்ஜோத் சிங் பிற்பகல் 1 மணிக்கு விளையாட உள்ளனர்.
ஹாக்கி:
இந்திய ஆடவர் ஹாக்கி அணி இன்று (ஜூலை.30) மூன்றாவது குரூப் ஆட்டத்தில் விளையாடுகிறது. பி பிரிவில் இடம் பெற்று உள்ள இந்திய அணி இன்று அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தியா - அயர்லாந்து இடையிலான ஆண்கள் ஹாக்கி குரூப் பிரிவு ஆட்டம் மாலை 4:45 மணிக்கு நடைபெறுகிறது.
வில்வித்தை:
பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா பகத் மற்றும் பஜன் கவுர் ஆகியோர் விளையாடுகின்றனர். 41வது போட்டியில் போலந்தின் வயோலெட்டா மஸ்ஸருடன் அங்கிதா விளையாடுகிறார். அதே நேரத்தில் பஜன் கவுர் இந்தோனேசியாவின் கமல் சாயிபா எதிர்கொள்கிறார்.
இந்திய வீராங்கனைகள் இருவரின் போட்டிகளும் எலிமினேஷன் போட்டிகள், எந்த அணி தோற்குமோ அந்த அணி ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 32 எலிமினேஷன் ஆட்டத்தில் தீரஜ் பொம்மதேவரா விளையாடுகிறார்.