பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகைன் சீனாவின் Li Qian எதிர்கொண்டார். முதல் சுற்று முதலே சரமாரியாக குத்துகளை விட்ட சீன வீராங்கனை, லவ்லினா போர்கோகைனை திணறடித்தார். எதிரணி வீராங்கனையின் சரமாரி குத்துகளால் திணறிப்போன லவ்லினா முதல் சுற்றை 2-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இரண்டாவது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனை, அதிலும் 3-க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதி வரை போராடிய லவ்லினாவால் அரைஇறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கை வைக்க முடியவில்லை. மூன்றாவது சுற்று முடிவில் லவ்லினா போர்கோகைன் 4-க்கு 1 என்ற கணக்கில் சீன வீராங்கனை Li Qian தோல்வியை தழுவி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
இந்த வெற்றியின் மூலம் சீன வீராங்கனை மகளிர் குத்துச்சண்டையின் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஓலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்த லவ்லினா, பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பதக்க அறுவடை செய்வார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஆசிய ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சீன வீராங்கனையிடம் லவ்லினா போர்கோகைன் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது. காலிறுதி சுற்றில் லவ்லினா போர்கோகைன் தோல்வி அடைந்ததன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கின் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் பதக்க கனவும் கலைந்து போனது.
மறுபுறம் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி, கால் இறுதியில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் பாதியில் இரண்டு அணிகளும் தலா 1 கோல் போட்ட நிலையில், ஆட்டம் சமனில் முடிந்தது. சிறப்பான தடுப்பாட்டத்தில் இரண்டு அணி வீரர்கள் ஈடுபட்டதால் மேற்கொண்டு யாராலும் பதில் கோல் திருப்ப முடியவில்லை.
இறுதியில் ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்ததால் ஷூட் அவுட் சுற்று கொண்டு வரப்பட்டது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய வீரர்கள் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தினர். இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக விளையாடி கிரேட் பிரட்டன் வீரர்களின் இரண்டு கோல்களை தடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றும் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் ஹாக்கி: காலிறுதியில் இந்தியா அபார வெற்றி! - Paris Olympics 2024