தஞ்சாவூர்: இந்திய நாட்டின் 76வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று (ஜன.26) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மூவர்ண தேசிய கொடியினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 63 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். பின் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சரக காவல்துறையின் துணை தலைவர் ஜியாவுல்ஹக், எம்.எல்.ஏ நீலமேகம், மாவட்ட காவல் எஸ்பி ராஜாராம், மேயர் இராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரனுடன் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழா: முதலமைச்சரின் வரவேற்பை ஏற்று, கொடியேற்றி வைத்தார் ஆளுநர்!
அதேபோல, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
மாற்றுத்திறனாளி, வேளாண் தோட்டக்கலை, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஏழு துறை சார்ந்து 79 பயனாளிகளுக்கு 3 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சஜீவனா மூவர்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டார். பின் தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்தது.