சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இன்று (ஜன.26) டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் வளாகம் அருகே இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்களை காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்பாகவே கைது செய்து அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: 'ஜபகர் அலியை வெட்டி கொன்றுள்ளனர்; இது விபத்து அல்ல' - ஹென்றி திஃபேன் பரபரப்பு குற்றச்சாட்டு!
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பணியாளர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்த முயன்ற தங்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பணி நிரந்தரம் வேண்டியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட கோரியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.
முன்னதாக நேற்று இரவு பணி முடிந்து போராட்டத்திற்கு திரும்பியபோது அனைத்து தொழிலாளர்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்காக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.