மயிலாடுதுறை: நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விடப்பட்டது. பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் 262 நபர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை;
முன்னாள் படை வீரர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தொழில் வணிகத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, முதலமைச்சரின் விரிவான மற்றும் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 176 பயனாளிகளுக்கு சுமார் 8 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைத் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏபி.மகாபாரதி வழங்கினார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழா: முதலமைச்சரின் வரவேற்பை ஏற்று, கொடியேற்றி வைத்தார் ஆளுநர்!
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலம், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், தேனியில் போடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது போடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அலுவலகத்தில் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதில், அதிமுக தொண்டர்கள், மீட்புக் குழு உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி போடி சட்டமன்ற அலுவலகத்தில், ஓ.பன்னீர்செல்வம் குடியரசு தின விழாவைக் கொண்டாடினார்.