பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.31) 5வது நாளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க உள்ளனர்.
துப்பாக்கிச் சுடுதல்:
துப்பாக்கிச் சுடுத போட்டியில் இந்திய வீரர்கள் ஐஸ்வர்யா தோமர் மற்றும் ஸ்வப்னில் குசலே ஆகியோர் 50 மீட்டர் ரைபிள் 3ஆம் நிலைக்கான ஆண்கள் தகுதி சுற்றுப் போட்டியில் இன்று விளையாடுகின்றனர். இந்த பிரிவில் இறுதிப் போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா தோமர் இந்த போட்டியில் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள ஐஸ்வர்யா தோமர், உலகக் கோப்பையில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டார். ஆனால் போட்டியில் 21வது இடத்தை அவர் பிடித்தார். அதேபோல் உலகத் தரவரிசையில் 62வது இடத்தில் இருக்கும் ஸ்வப்னில், ஒலிம்பிக்கில் முதல் முறையாக களம் காணுகிறார். இருவரது போட்டியும் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணி அளவில் நடைபெறுகிறது.
பேட்மிண்டன்:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து இந்திய நேரப்படி 12:50 மணிக்கு விளையாடுகிறார். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரவில் எச்.எஸ்.பிரணாய் இந்திய நேரப்படி 11:00 மணிக்கும் அதைத் தொடர்ந்து லக்சயா சென் மதிய 1:40 மணிக்கும் விளையாடுகின்றனர்.