சென்னை: முயற்சிகள், தொழில்நுட்பங்கள், புதிய படைப்புகள் என பல சாதனைகளை சென்னை ஐ.ஐ.டி (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) செய்து வருகிறது. தங்களின் ஆய்வு சாதனைகளின் தொடர்ச்சியாக புதிய அதிநவீன ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்துள்ளது.
கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள தையூரில் இதன் ஆய்வகம் அமைந்துள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் ஆசியாவிலேயே பெரிய ஆழமற்ற கடல் அலை படுகை எனும் அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய துறைமுகங்கள், நீர்வழிகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச் னைகளுக்குத் தீர்வுகாணும் பிரத்யேக வசதிகள் இங்கே உள்ளன. இது சிக்கலான அலைகள், கடல் நீரோட்டத்தைக் கையாளக் கூடிய பல்திசை ஆழமற்ற அலைப்படுகையாகும்.
துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் (National Technology Centre for Ports and Waterways and Coasts) மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்கூடம், துறைமுகங்கள்- கடல்சார் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள், மேம்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாகும்.
கடல் அலை படுகை மையம்:
இந்த மையம் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகச் செயல்படுவதுடன், துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (Inland Waterways Authority of India-IWAI) உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறது.
இதுகுறித்து பேசிய பெருங்கடல் பொறியியல் துறையின் பேராசிரியர் முரளி, ஆழமற்ற கடல் அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் சர்வதேச அரங்கில் சென்னை ஐஐடி பெரியளவில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். ஆராய்ச்சி- தொழில் பயன்பாடுகளுக்கான ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆய்வகத்தில் அலைகளை உருவாக்க பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது என தெரிவித்தார்.
சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீராம் கூறும்போது; சில பொருட்கள் இங்கு கிடைக்காததால் நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். மற்ற எல்லாவற்றையும் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை ஐஐடியில் உருவாக்கியவை.
கட்டுமானத் திட்டமிடல், தொலைத்தொடர்பு, வடிவமைப்பு போன்ற இயக்கத்திற்கான வசதிகள் தயார் நிலையில் இருந்து வருவதுடன், நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டன. புதிய துறைமுகங்கள், கடல்சார் பொறியியல், உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் என இந்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று கூறினார்.
ஆய்வுக்கூடத்தின் நன்மைகள்:
கட்டமைப்புகளில் ஏற்படும் முப்பரிமாண அலைகளின் தாக்கம் முக்கியமானது என்பதால், அடிப்படைப் புரிதலுக்கும் பயன்பாட்டுத் திட்டங்களுக்கும் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். துறைமுகம், கடல்சார், கடற்கரைக்கு அப்பால், உள்நாட்டு நீர்வழிகள், ஆழமற்ற நீர்வழி மாற்றுத் திட்டங்களுக்காவும் இந்த கடல் அலைப் படுகையைப் பயன்படுத்தலாம்.
வண்டலை எடுத்துச் செல்லுதல், மொபைல் படுக்கை மாதிரியாக்கம், கவச அலகுகளின் நிலைத்தன்மை, ஹைட்ராலிக்- ஹைட்ரோடினமிக் செயல்திறன், அலைத்தாக்கத்தை உயர்த்துதல் ஆகியவற்றை அறிந்து கொள்வதுடன், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வடிவமைப்பு அம்சங்களைத் தீர்மானிப்பதையும் உறுதிப்படுத்த இந்த ஆய்வுக்கூடத்தால் முடியும் என்கிறது ஐ.ஐ.டி நிர்வாகம்.
கடலோரக் கட்டமைப்பு வகைகளை சோதித்தல், கடலோரக் கட்டமைப்புகளின் தாக்கத்திற்கு பிந்தைய பகுப்பாய்வு, பெரிய அளவிலான மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்கள், காலநிலைமாற்ற விளைவுகள் போன்ற எண்ணற்ற பல்வேறு திட்டப் பணிகளில் பயன்படுத்துவது இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் முக்கிய நன்மைகளாகும். தேவைப்படும் பட்சத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு திட்டங்களை இணையாகவும் செயல்படுத்த முடியும்.
இதையும் படிங்க |
இந்தியக் கடலோரப் பகுதிகளில் புதிய துறைமுகங்கள் வளர்ந்துவரும் நிலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கூடம் திட்டமிடலுக்கு உதவும் முக்கிய கருவியாக அமைந்துள்ளது. இந்த அளவுக்கு பெரிய அளவிலான ஆய்வகத்தை உருவாக்குவதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவைக் கொண்டு, இந்தியாவில் உள்ள என்ஐடி-க்கள், ஐஐடி-க்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இத்தகைய அதிநவீன ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதற்கு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது.
கடல் அலை படுகை அம்சங்கள்:
கடலலைகள், நீரோட்டம் மற்றும் இவை இரண்டின் கலவை ஆகியவற்றை ஒரே நேரத்தில் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக 5 முதல் 18 விநாடிகள் என்ற வரம்புகளில் 3 மீட்டர் வரையுள்ள அலையை உருவாக்க முடியும். வரும் காலங்களில் இதன் காலவரம்பு 1:10 என்ற அளவிலோ அல்லது அதற்கும் பெரிய அளவிலோ அலைகளை நிலைநிறுத்த முடியும்.
தொட்டியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நீரோட்ட வசதி, படுகை உள்ளே நீரோட்டங்கள் சுழலும் முறைபோன்றவை எதிர்காலத்தில் இன்னும் சிறந்த அளவில் செயல்படுத்தப்படும். தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பரந்த அளவிலான பிரச்னைகளுக்கு துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் (NTCPWC) பயனளிக்கும் தீர்வுகளை வழங்குகிறது.
இதுதவிர உள்ளூர், தேசிய, சர்வதேச அளவிலான கடல்சார் போக்குவரத்துத் துறையில் அறிவியல் ரீதியான ஆதரவு, மதிப்புவாய்ந்த கல்வி, பயன்பாட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவற்றையும் இந்த மையம் அளித்து வருகிறது.