தேனி: தேனியில் அரசு நிலத்தை தனியாருக்கு சட்டவிரோதமாகப் பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் சரணடைந்த பெண் கிராம நிர்வாக அலுவலரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கத் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியராக பொறுப்பேற்ற ரிஷப், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு தரிசு நிலங்கள், தனிநபருக்கு முறைகேடாகப் பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் பூதாகரமாக வெடித்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 2 கோட்டாட்சியர்கள், 2 வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், 2 நில அளவையர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், 2018 - 2020 ஆம் ஆண்டுகளில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள 12 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன், கனிப்பிரியா, வனிதா ஆகிய 3 பேரும் சேர்ந்து, அவர்கள் பணிபுரிந்த கால கட்டங்களில் சட்டவிரோதமாக தனியாருக்குப் பட்டா மாறுதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர் கையில்! யுஜிசி வெளியிட்ட புதிய வரைவு!
ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூன்று விஏஓக்களும் தலைமறைவாக இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், விஏஒ கனிப்பிரியா மட்டும் இன்று தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து, அவரை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
பின்னர், கிராம நிர்வாக அலுவலர் கனிப்பிரியாவை நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும், தலைமறைவாக உள்ள விஏஒ கணேசன் மற்றும் விஏஒ வனிதா ஆகியோரையும் சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.