சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
துரிதமான நடவடிக்கை
24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலையிலேயே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.
இருந்தாலும், எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்கள்? முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாகப் பேசுகிறார்கள். அதற்குக் காரணம் யார்? ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிற N.I.C. (National Informatics Centre - தேசிய தகவல் மையம்). அது நம்முடைய காவல் துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதற்குப் பின்னால் அந்தத் தொழில்நுட்பக் கோளாறும் சரிசெய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அந்த நிறுவனமும் விளக்கம் கொடுத்து, N.I.C.-யிலிருந்து கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.
சிசிடிவி கேமரா ஆதாரம்
அடுத்து, பாதுகாப்பு இல்லை; கேமரா இல்லை என்று பொத்தாம்பொதுவாச் சொல்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றியிருக்கிற பகுதிகளிலிருந்த கண்காணிப்புக் கேமிராக்கள் உதவியோடதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
யாராக இருந்தாலும் சரி
மூன்றாவது குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக் கொண்டு, “யார் அந்த சார்?” என்று கேட்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்போது இந்தப் புகாரை விசாரிக்கிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பது தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
அதுமட்டுமல்ல; இன்னும் முக்கியமானது, இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும். அதோடு, சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை என்பதை இந்த அவைக்கு நான் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எதிர்க்கட்சிகளைக் கேட்க விரும்புவது - “யார் அந்த சார்?” என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள்; அதைச் சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டு விட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
பரங்கிமலை மாணவி வழக்கு
சத்யா என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் மிகக்குறுகிய காலத்திலே உச்சபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிற அரசு இந்த அரசுதான். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்ட மனமில்லையென்றாலும் பரவாயில்லை - வீண்பழியைச் சுமத்தாமல் இருந்தால், அதுவே போதும்.
பொள்ளாச்சி சம்பவம்
கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி, தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார். பிரச்சனைக்குரிய நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றார். பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் எடுத்தல், செயின் பறிப்பு என்று புகார் கடிதம் தரப்படுகிறது. வீடியோக்கள், செல்போன்கள் ஆகியவற்றுடன் 4 குற்றவாளிகளையும் இவர்கள் ஒப்படைக்கிறார்கள். இதனைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதியவில்லை; எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய முதல்வர் "சார்" ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம்.
அதுமட்டுமா? அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்குகிறார். அந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசுதான் அ.தி.மு.க. அரசு. சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், ஏதோ மூன்று பேரை கைது செய்து கணக்கை முடிக்கப் பார்த்தார்கள். ஆனால், சி.பி.ஐ. விசாரணையில், பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க. பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
பணிவான வேண்டுகோள்
இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, இப்பொழுது பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.க.-வைப் பார்த்து என்னால் கேட்க முடியும். தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்'' என்றார்.