சென்னை: பல்லாவரம் அருகே நடிகர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு செலவு செய்து ஆர்ப்பரித்த தீவிர ரசிகர், தற்போது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி ரகு(54), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சித்ரா என்பவருடன் திருமணமாகியுள்ளது. தீவிர ரஜினிகாந்த் ரசிகரான ரகு கடந்த 48 வருடமாக அனகை ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார்.
மேலும், ரஜினியின் பிறந்த நாள் மற்றும் திரைப்படம் வெளியாகும் போது, தனது சொந்த செலவில் அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு பை, பாடப்புத்தகம், சீருடை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதற்காக நண்பர்கள், உறவினர்கள், வங்கிகள் மூலமாக சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி செலவு செய்ததாக ரகுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் ரகுவின் மனைவி வேலைக்குச் சென்ற நிலையில், அப்போது கடன் பணத்தைக் கேட்டு வீட்டிற்கு வந்த தனியார் வங்கி ஊழியர், ரகுவை தகாத முறையில் பேசி திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், மன உளைச்சலில் இருந்த ரகு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து IPC Sec 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது குற்றப் பின்னணி குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும், அதன் தொடர்ச்சியாக ஞானசேகரன் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு சொத்து ஆவணங்கள், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர். பின்னர் அவரது சொத்து ஆவணங்கள் குறித்து பத்திரப்பதிவுத்துறை வருவாய்த்துறை சென்னை மாநகராட்சி ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி! போக்சோ வழக்கு பின்னணி என்ன?
அந்த விசாரணையில், கடந்த 10 வருடங்களாக சென்னை கோட்டூர்புரம் பகுதியில் ஞானசேகரன் வீடு கட்டி குடியிருந்து வந்ததும், அவர் வசித்து வந்த வீடு கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் செயல் அலுவலரான நாராயணி மயிலாப்பூரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஞானசேகரன் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவரின் வீடு இருக்கும் இடத்தை அளந்து அந்த வீட்டின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை மீட்டு கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோயில் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.