கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியின் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை கோவில். வனப்பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம், ஏழு மலைகளைக் கடந்து இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொதுமக்கள் இந்த கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான மலை ஏற்றம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி துவங்கிய நிலையில், பொதுமக்களுக்கு மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏற்றம் மேற்கொள்கின்றனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பக்தர்கள் மலை ஏறுகின்றனர். அவ்வாறு மலை ஏற்றம் மேற்கொள்பவர்களை பூண்டி அடிவாரத்தில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து மலை ஏற அனுமதித்து வருகின்றனர். மேலும் மலை மீது பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீர் பாட்டில்கள், எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மலை மீது எடுத்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் கேன்களுக்கு 20 ரூபாய் வைப்பு தொகை பெறப்பட்டு, பாட்டில் மீண்டும் ஒப்படைத்த பின்னர் அந்த பணம் மீண்டும் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மலை ஏற்றம் துவங்கியதில் இருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் வெள்ளியங்கிரி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி கோயிலுக்கு செல்லும் வழியில் மரத்தின் மீது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை சிலர் பறக்கவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் தவெக கட்சி கொடியினை பறக்க விட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடர் வனப்பகுதியில் மலை மீது தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், மலை மீது தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை வனப் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மலையேற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மலை மீது தவெக கட்சி கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்கள் அறையில் வளர்க்கப்பட்ட 24 கஞ்சா செடிகள்! சிக்கியது எப்படி!
இதனையடுத்து தவெக கட்சி கொடி அகற்றப்பட்டுள்ளது. இந்த கொடியை யார் கொண்டுச் சென்றனர் என்பது குறித்து போளுவாம்பட்டி வன அலுவலர் (பொறுப்பு) திஷார் சிண்டே தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், உடனடியாக கட்சி கொடி அகற்தப்பட்டு வனப்பகுதியில் அத்துமீறி கட்சிக் கொடியை பறக்க விட்டவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.