சென்னை: நடிகை மீனாட்சி சவுத்ரி தான் ’தி கோட்’ (Greatest of all time) படத்தில் நடித்திருக்கக் கூடாது என கூறியுள்ளார். பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி கடந்த 2019ஆம் ஆண்டு 'upstarts' என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஹிட்' (HIT) படத்தில் நடித்தார். பின்னர் ஹிட் இரண்டாம் பாகம், ரவிதேஜாவுடன் 'கில்லாடி' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
இதனையடுத்து தமிழில் விஜய் ஆண்டனியுடன் 'கொலை', ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்களில் நடித்தார். மேலும் கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'தி கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். கோட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
லக்கி பாஸ்கர் படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்கு வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்தி வஸ்துன்னம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் போது தனியார் யூடியூப் சேனலில் பேசிய மீனாட்சி சவுத்ரி, கோட் திரைப்படம் வெளியான பிறகு தன்னை ரசிகர்கள் அதிகமாக ட்ரோல் செய்ததாகவும், அதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜனவரி மாத இறுதியில் வெளியாகுமா விடாமுயற்சி? - VIDAAMUYARCHI RELEASE
ஆனால் அதற்கு பிறகு வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் தனது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் இனி நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்த கோட் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.