டெல்லி :பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியி கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் கோட்டைவிட்டது.
அதேபோல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் ஷாகீன் ஷா அப்ரிடி தலைமையிலான லாஹூர் கலாந்தர்ஸ் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்தடுத்த மோசமான செயல்பாடுகள் காரணமாக ஷாகீன் ஷா அப்ரிடியின் தலைமை மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பை கவனித்து வந்த பாபர் அசாம் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் சொதப்பியதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து நவம்பர் மாதம் முதல் ஷான் மசூத் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏபரல் மாதம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது. விரைவில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பாகிஸ்தான் மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசுலாந்து அணி விளையாட திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிங்க :LSG Vs PBKS:அபார பந்து வீச்சு..பஞ்சாபை பந்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! - LSG VS PBKS