ஹைதராபாத்: இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்தீர ஜடேஜா தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.
அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்திய அணி நாள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 421 ரன்கள் குவித்து 175 ரன்கள் முன்னிலை வகித்தது. களத்தில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இந்த நிலையில், இன்று முன்றாவது நாள் தொடர்ந்த போட்டியில் பேட்டிங் செய்து வந்த இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86 மற்றும் ஜடேஜா 87 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அதையடுத்து, 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான சாக் கிராலி 31, பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களம் வந்த ஜோ ரூட் 2, ஜானி பேர்ஸ்டோவ் 10, பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் ரன்கள் என ஆட்டமிழக்க, மறுபுறம் இருந்த ஓல்லி போப் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு ரன்கள் சேர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் 148 ரன்களை குவித்து களத்தில் உள்ளார்.
அவருடன் ரெஹான் அகமது 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்து 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:"இது நான் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக மோசமான ஒன்று" - அரையிறுதி தோல்விக்கு பிறகு நோவக் ஜோகோவிச்!