துபாய்:9வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்.14) நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைய முடியம் என்ற காரணத்தால் போட்டி கடும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டிவைன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 28 ரன்களும், ப்ரூக்கி ஹாலிடே 22 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் நசரா சாந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 111 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை முனிபா அலி 15 ரன்களும், கேப்டன் பாத்திமா சனா 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியில் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 11.4 ஓவர்களில் முடிவிலேயே பாகிஸ்தான் மகளிர் 56 ரன்களுக்கு மண்ணை கவ்வினர்.
இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி அரைஇறுதி சுற்றுக்கும் நியூசிலாந்து மகளிர் அணி தகுதி பெற்றது. 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த அணி மீண்டும் உலக கோப்பை அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணியில் தோல்வியால் இந்திய மகளிர் அணியின் அரைஇறுதி வாய்ப்பும் மண்ணோடு மண்ணானது. ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது இடத்திற்கு பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா ஆகிய மூன்று அணிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், பாகிஸ்தானை வீழ்த்தி 3 வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி அரைஇறுதி சுறுக்கு முன்னேறியது. மொத்தம் 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய மகளிர் அணி தலா 2 வெற்றி மற்றும் தோல்விகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணியுடன் சேர்த்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் அரைஇறுதி வாய்ப்பு இழந்து வெளியேறின. பி பிரிவில் இன்று (அக்.15) இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே கடைசி லீக் ஆட்டம் நடைபெறுகிறது. ரன் ரேட்டில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசமமாக இருந்தாலும், அதிக வித்தியாசத்துடன் வெற்றி பெற்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அரைஇறுதிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க:"ஆர்சிபிக்கு அவரை இழுக்க ரூ.20 கோடி வேணும்"- அஸ்வினின் பேச்சால் மீண்டும் சூடுபிடிப்பு!