ஹைதராபாத்: இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் பாரிஸ் டைமண்ட் லீக் தொடரை தவிர்க்கிறார். ஏனென்றால், அவர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடருக்கு தயாராவதற்கான பயிற்சியில் தீவிரமாக இறங்க உள்ளார். தற்போது, இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஒலிம்பிக் சாம்பியன்களான ஃபெய்த் கிபிகோன், மொண்டோ டுப்லாண்டிஸ் (போல் வால்ட்), மலாய்கா மிஹாம்போ (நீளம் தாண்டுதல்), வலேரி ஆல்மேன் (வட்டு) மற்றும் வோஜ்சிக் நோவிக்கி (சுத்தி எறிதல்) ஆகியோர் டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் நடைபெற்ற பாவோ நுர்மி விளையாட்டுத் தொடரில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, தனது மூன்றாவது முயற்சியில் 85.97 மீட்டர் உயரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். முதல் முயற்சியிலேயே 83.62 மீட்டர் உயரத்திற்கு வீசிய நீரஜ் சோப்ரா, தனது மூன்றாவது முயற்சியில் பதக்கத்திற்கான இலக்கை எட்டினார். அதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டு பாவோ நுர்மி விளையாட்டு தொடரில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு! கோலி, அக்சர் அபாரம்! - Ind vs SA T20 World CUP Final 2024