ராமநாதபுரம்: எல்லை தாண்டி வந்து பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகும், அதிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (பிப்.8) மீன்வளத் துறையிடம் உரிய அனுமதிச் சீட்டு பெற்று, கடலில் மீன் மீன் பிடிப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சென்றுள்ளது. அவ்வாறு சென்ற மீனவர்கள், இந்தியக் கடல் எல்லைப் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகும், அதிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, மன்னர் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள், விசாரணைக்கு பிறகு இலங்கை மன்னர் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
தமிழர்களின் படகுகள் ரூ.5.6 லட்சத்துக்கு ஏலம்:
இலங்கை கடற்பரப்பிற்கு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் என அனைத்தும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஏலம் விடுபட்டுள்ளது. அந்த வகையில், அரசுடமையாக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளும் ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
அதாவது, வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, வல்வெட்டித்துறை போலீசாரால் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி, முன் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாராணை செய்யப்பட்ட நிலையில், மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. அவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் அனைத்து ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... திமுக கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
ஏலம் விடப்பட்ட பொருட்கள் விவரம்:
- லம்பாடி படகு - ரூ.2,12,000
- வலை - ரூ.1,81,000
- வெளி இணைப்பு இயந்திரம்- ரூ.36,000 மற்றும் ரூ.28,000
- நங்கூரம் - ரூ.8,000
- குளிரூட்டல் பெட்டி - ரூ.55,000
- ஜிபிஎஸ் - ரூ.5,100 மற்றும் ரூ.41,000 என மொத்தமாக 5,66,100 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஏலத்தில் இந்திய மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்து 350-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.