ஐதராபாத்:பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மனு பாக்கர். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற வீராங்கனை, ஒரு நளுக்குள் இரண்டு பதக்கம் வென்றவர் என்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் மனு பாக்கர்.
அதேநேரம் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுடன் காதலில் விழுந்ததாக மனு பாக்கர் குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மனு பாக்கர் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற பின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மனு பாக்கர், ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீராங்கனையாக அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்றது புதிய வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளுக்கான அலையாக பார்க்கிறேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட நிலையில், தற்போது இரண்டு பதக்கங்களை வென்று இருப்பது எனக்கான அங்கீகாரம் மற்றும் மதிப்பை பெற்றுக் கொடுத்ததாக உணர்கிறேன். அன்பு மற்றும் ஆதரவால் உணர்வசத்திற்குள்ளான எனக்கு ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக் கொடியை சுமந்து செல்லும் வாய்ப்பை வழங்கியது உத்வேகத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் ஓய்வில் உள்ள நீங்கள் இயல்பு வாழ்க்கையில் என்னென்ன பணிகள் மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பெரும்பாலும் பயிற்சி, காயங்களில் இருந்து மீண்டு வருதல், தனிப்பட்ட காரணங்களுக்காக நேரம் செலவிடுதல் என நாட்களை கழிந்து வருகின்றன.