பார்படோஸ் தீவுகள்: 9வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இந்த முறை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பார்படோஸ் தீவுகளில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் ஓமன் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஓமன் அணியில் காஷ்யப் பிரஜாபதி, நஷிம் குஷி ஆகியோர் அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஆரம்பமே ஓமன் அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்னரே அந்த அணி விக்கெட் கணக்கை தொடங்கியது.
தொடக்க வீரர் காஷ்யாப் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அகிப் இல்யாஸ் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஓமன் அணிக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் நஷிமும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனிடையே கூட்டணி அமைத்த ஷேஷம் மக்சூத் மற்றும் காலித் கலி மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இருப்பினும் இந்த கூட்டணியை நமீபியா அணியின் பெர்னாட் பிரித்தார்.