சென்னை: உலகின் உயரமான மலைகளில் ஏறிய முத்தமிழ் செல்வியின் சாதனைப் பயணம் தான் தன் மலையேற்ற பயிற்சிக்கு ஊக்கமளித்ததாக, தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான அகன்காகுவா மலையை ஏறி சாதனைப் படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேச சுப்பிரமணி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேச சுப்ரமணி. பொறியியல் பட்டதாரியான இவர் மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, மலை ஏறுவதற்கு கடும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல், “ யாதும் ஊரே யாவரும் கேளிர்”, அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்த மலை ஏற்றத்தை தொடங்கியுள்ளார்.
அதன்படி, முதலாவதாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மிக உயரமான மலையான மவுண்ட் எல்பர்ட் மலை (Mount Elbert) என்ற மலையை ஏறி சாதனை படைத்தார். இந்த நிலையில், தற்போது தென் அமெரிக்காவில் உள்ள 6962 மீட்டர் கொண்ட மிக உயரமான மலையான அகன்காகுவா (Aconcagua) என்ற மலையை ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆறு கண்டங்களில் உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதனை..முத்தமிழ் செல்வியின் குறிக்கோள் என்ன?
தற்போது, சென்னை திரும்பிய வெங்கடேச சுப்பிரமணிக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து வெங்கடேச சுப்பிரமணி கூறுகையில், “தென் அமெரிக்கா நாட்டில் உள்ள மிக உயரமான மலையான அகன்காகுவா என்ற மலையை ஏறி சாதனை படைத்துள்ளேன். மலை ஏறிக் கொண்டு இருந்தபோது 6000 மீட்டர் சென்றவுடன், கால சூழ்நிலை காரணமாக எனது குழுவில் இருந்த சிலர் மலையிலிருந்து கீழே இறங்கிவிடலாம் என்று கூறினர்.
எவரெஸ்ட் முத்தமிழ் செல்வி அளித்த ஊக்கம்:
ஆனால், நான் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன், என்னை நம்பி மிகப்பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளனர். அதனால், இந்த வாய்ப்பை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தால், மீதமுள்ள 962 மீட்டர் உயரத்தை ஏறி நமது நாட்டின் கொடியை நட்டு வைத்தேன். உலகில் ஆறு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தழிழ் செல்வியை பார்த்து மலையேற தொடங்கினேன்.
தற்போது என்னை பார்த்து என் கிராமத்து இளைஞர்கள் மலை ஏற ஆர்வத்துடன் வருவார்கள். நான் இந்த சாதனை படைப்பதற்கு உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.