தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"விராட் கோலியுடனான உறவு டிஆர்பிக்காக அல்ல"- கவுதம் கம்பீர் சொல்வது என்ன? - Gautam Gambhir on Virat Kholi - GAUTAM GAMBHIR ON VIRAT KHOLI

விராட் கோலியுடனான உறவு எங்கள் இருவருக்கும் இடையிலானதே தவிர டிஆர்பிக்காக அல்ல என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Gautam Gambhir (ANI Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 12:27 PM IST

மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுத் தலைவர் அகர்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் முதல்முறையாக கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டதால், அவருக்கும் விராட் கோலிக்கும் இடையிலான உறவு மற்றும் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், விராட் கோலி உடனான எனது உறவு எங்கள் இருவருக்கும் இடையே உள்ளதே தவிர டிஆர்பிக்காக அல்ல என்று கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் வைத்து இருவரும் நேருக்கு நேர் முட்டிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜூலை 27ஆம் தேதி தொடங்க உள்ள இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடரில் கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ் விராட் கோலி விளையாட உள்ளார்.

தங்களது அணிக்காக விளையாடும் ஒவ்வொருவருக்கும் அதற்காக போட்டி மற்றும் சண்டையிட்டுக் கொள்வது என்பது உரிமை என்றும் அதுகுறித்து இருவரும் பலமுறை கலந்து பேசிக் கொண்டதாகவும் கவுதம் கம்பீர் கூறினார். 20 ஒவர் வடிவ கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் விலகிய நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா போன்ற சிறந்த வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை குறித்து அணி கவனத்தில் கொள்வதாக கம்பீர் தெரிவித்தார்.

மேலும் விராட் கோலியுடனான விவகாரத்தில் இருவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் களத்திற்கு வெளியே அவருடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் கம்பீர் கூறினார். இருவரும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேசி வருவதாகவும் தங்களுக்கு இடையே செய்தி பரிமாற்றம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே மிக முக்கியமான விஷயம் என்றும் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும் கவுதம் கம்பீர் குறிப்பிட்டார். டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகியதை அடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பார்மட்டுகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதை தான் விரும்புவதாக கம்பீர் கூறினார்.

விராட் கோலி தொழில்முறை விளையாட்டு வீரர் என்கிற வகையில் மதிப்பதாகவும் இருவருக்கும் உள்ளான உறவு குறித்து பல முறை கலந்துரையாடியதாகவும் கவுதம் கம்பீர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமையின் கீழ் இந்திய வீரர்கள் முதல் முறையாக இலங்கையுடன் விளையாட உள்ளனர்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 20 ஓவர் கிரிக்கெட் அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:பாபா இந்திரஜித் அதிரடி.. கோவையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திண்டுக்கல்! - TNPL 2024

ABOUT THE AUTHOR

...view details