சென்னை:சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று (ஆக.30) நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரில், யு மும்பா டிடி அணியும், சென்னை லையன்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. மிகவும் பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணி 8-7 என்ற கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது அபார வெற்றி பெற்றது.
மும்பை அணியின் மானவ் தாக்கர், அனுபவம் வாய்ந்த சென்னை அணியின் சரத் கமலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 29 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில், சென்னை அணி 19 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் மும்பை அணியின் மானவ் தாக்கர் முதல் செட்டை இழந்தாலும், அதன் பின்னர் மீண்டு வந்து 6-11, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இந்த சீசனில் தனது தொடர்ச்சியான வெற்றிகளைத் தக்க வைத்துக் கொண்டார்.
அடுத்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் மும்பை அணியின் மரியா சியாவோவுடன், மானவ் தக்கார் ஜோடி 11-7, 11-10, 11-4 என்ற செட் கணக்கில் சென்னை அணியின் ஜோடியான ஷரத் மற்றும் சகுரா மோரியை தோற்கடித்து தும்சம் செய்தது. தொடர்ந்து, மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான அருணா குவாட்ரி, சென்னை அணியின் ஜூல்ஸ் ரோலண்டிற்கு எதிராக 10-11, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவில் மும்பை அணியின் சுதிர்தா முகர்ஜியை சென்னை அணி வீராங்கனை மோரி 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் மும்பை அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 2 கால்களை இழந்த நிலையிலும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தயார்.. யார் இந்த சேத்தன் கொராடா?