மும்பை :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.7) பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் இன்னிங்சை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பம் முதலே அடித்து ஆடிய ரோகித் சர்மா சீரான இடைவெளியில் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.
6 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா 49 ரன்கள் குவித்து நூலிழையில் தனது அரை சதத்தை கோட்டைவிட்டார். அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ரோகித் சர்மா (49 ரன்) க்ளீன் போல்ட்டாகி வெளியேறினார். அடுத்து பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனுடன், கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா களம் கண்டார். இருவரும் சீரான இடைவெளியில் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். இஷான் கிஷன் தன் பங்குக்கு 42 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தார்.