பாரிஸ்:பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் நிறைவு விழா, இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 3:30 மணி வரை நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தை சேர்ந்த பாடகி ஏஞ்சலின் இசை நிகழ்ச்சி மற்றும் பிரெஞ்சு பாடகர் யெஸோல்ட் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மைதானத்தில் மேற்கூரையிலிருந்து குதித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து கண்ணைக் கவரும் வகையில் வாணவேடிக்கைகள நிகழ்த்தப்படன. இந்த நிகழ்வின் போது இந்தியா சார்பில் ஹாக்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிஆர் ஸ்ரீஜேஷ் மற்றும் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்த மனு பாக்கர் ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்தில் சுற்றி வந்து ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்றனர். இறுதியாக பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஒலிம்பிக் சுடர் அணைக்கப்பட்டது.
பதக்க பட்டியல்:17 நாள்கள் கோலாகலமாக நடைபெற்ற 33வது ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சார்பில் 117 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். அனைத்து வீரர்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடினார். இறுதியாக 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது இந்தியா. இதன் மூலம் பதக்க பட்டியலில் 71வது இடத்தை பெற்றது.
பதக்க பட்டியலில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 40 தங்கம், 27 வெள்ளி 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் சீனா இரண்டாவது இடத்தை பிடித்தது. ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 45 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தை நிறைவு செய்தது. ஒலிம்பிக் போட்டியை நடத்திய பிரான்ஸ், ஒட்டுமொத்தமாக 64 பதக்கங்களைப் பெற்று 5வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம்? இன்று தீர்ப்பு வெளியாகிறது!