சென்னை: ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி பாஜக நாட்டை நகர்த்தப் பார்க்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக மாற்றுவதற்கு பயன்படும். இதில், அரசியல் காரணங்களுக்காக பாஜக-வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது என பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். மேலும், மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ரகுபதி, பொன்முடி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், "நமது சட்டத்துறை வழக்கறிஞர்கள் அணி மட்டுமல்ல, கழகத்தைக் காக்கும் காவல் அணி. 1975-இல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, நான் உள்பட பலரும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டோம். வெளியில் இருந்த பலரும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்கள். அவர்கள் அனைவரையும் பாதுகாத்தது சட்டத்துறை. கடந்த கால அதிமுக ஆட்சிகளில் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட ஏராளமான பொய் வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறோம். அதற்கு துணையாக நின்றது சட்டத்துறை.
சட்டத்துறையின் முக்கிய போராட்டங்கள்:
- அண்ணா அறிவாலயம் கட்ட அனுமதி இல்லை என்று தடை போடப்பட்டது.
- கருப்பு சிவப்பு கொடிக்கும், உதயசூரியன் சின்னத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது.
- கருணாநிதி மறைந்தபிறகு, பேரறிஞர் அண்ணாவின் அருகில் அவர் துயில்கொள்ள நடந்த சட்டப் போராட்டம்
உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீட்டது சட்டத்துறை தான் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மக்கள் நலனுக்கான பணிகள்:
- அதிமுக ஆட்சி முடக்க நினைத்த சமச்சீர் கல்வியைக் காப்பாற்றினோம்.
- குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
- நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கை தடுத்தோம்.
- மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கினோம்.
- கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா இருக்கும் இடத்தை தனியாரிடம் இருந்து மீட்கக் காரணமாக இருந்தோம்.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது.
- மருத்துவம் மற்றும் மருத்துவ உயர் கல்வியில் ஆண்டுதோறும் 5 ஆயிரத்து 500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கிறது.
இந்தச் சமூகநீதி சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சாத்தியப்படுத்தியது சட்டத்துறை. திமுக சட்டத்துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, மாநில, ஒன்றிய அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
நாட்டுக்கே ஒரே தேர்தல்:
மத்திய பாஜக அரசு ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காக ஒரே தேர்தல் என்று கிளம்பியிருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள். பாஜக-வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டம் தான் இருக்கும்.
இதையும் படிங்க: "சாதி, மதம் இல்லாத தமிழ் சமுதாயத்தின் மாண்பை மீட்டெடுப்பது தான் திராவிடம்"-ஆ.ராசாவின் அதிரடி விளக்கம்!
தற்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்கு வழிவகுக்கும். தனிமனிதர் ஒருவரிடம் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும். இது பாஜக-விற்கு நல்லதல்ல. பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக மாற்றுவதற்கு இந்தச் சட்டம் பயன்படும். இதில், அரசியல் காரணங்களுக்காக பாஜக-வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது.
பாஜக-வைஆதரிப்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக்கு முரணான சட்டங்களை ஆதரிக்கக் கூடாது. கூட்டாட்சியை காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்க்க வேண்டும். பாஜகவின் செயல்திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை சமூகத்தில் விதைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்து பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதைனை கடந்து நாம் போராட வேண்டும்.
ஆளுநரை மாற்றிவிடாதீர்கள்:
நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இறங்கியுள்ளார். மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்கு நிற்காமல் வெளியேறியது எந்த ஆளுநர்? நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அவர் பேச பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது.
திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவர் ஆளுநர். 2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு சட்டத்துறை முக்கிய காரணம். இந்த வெற்றி 2026 தேர்தலிலும் தொடர வேண்டும்," என்று தெரிவித்து தனது உரையை நிகழ்த்தினார்.