சென்னை: திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். மேலும், மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ரகுபதி, பொன்முடி, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழகர்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, தமிழர்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித்தந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் 1 - ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற வேண்டும்:
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட வடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட, அறிமுக நிலையிலேயே மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பணம் சிக்கனம் என்ற ஒரு பொய்யான காரணத்தை தவிர வேறு எந்த காரணமும் இல்லாமல், நடைமுறையில் சாத்தியமில்லாத, தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் காலத்தை மத்திய அரசு எதேச்சதிகார போக்கில் முடிவு செய்ய வழி வகுக்கும் இந்த அரசியல் அமைப்பு சட்ட திருத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அந்த சட்டம் நிறைவேற்றப்படும் நிலையில் தகுந்த வழக்குகள் தொடரப்படும்.
தீர்மானம் 2 - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம்:
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழர்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்துகின்ற ஒரு செயலாக, கழக அரசின் சாதனை திட்டங்கள் கொண்ட உரையினை படிக்காமல் வெளியேறுகிறார்.
தமிழக சட்ட மன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், துணை வேந்தர் நியமனங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மாநில சுயாட்சியை குலைக்கும் வகையிலும் ஆளுநர் நடந்து கொள்வது ஜனநாயகத்தை சீர்குலைத்திடும் வகையில் உள்ளது. எனவே, சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநர் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தீர்மானம் 3 - எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்:
பாலியல் குற்றம் புரிவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது. மேலும், கல்வி பயில் விருப்பத்துடன் வருகின்ற தமிழ்நாட்டின் மாணவியர்களிடமும், அவர்தம் பெற்றோர்களிடமும், தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்ற முறையில் வீண் வதந்திகளைப் பரப்புகிறார்.
இதையும் படிங்க: ஆளுநர் ரவி இருக்கட்டும்; அப்போது தான் பா.ஜ.க அம்பலப்படும் - ஸ்டாலின் சூசகம்!
மேலும், அரசியல் இலாபம் கருதி, வடிகட்டியப் பொய்யை, அறிக்கையாக விடுத்தும், சுவரொட்டிகள் மூலமாகவும் தேவையில்லாத அச்ச உணர்வை பொது மக்கள் இடையே ஏற்படுத்துகின்ற வேலையினை வரும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு சம்பவத்தை மூடி மறைத்து, குற்றவாளிகளைப் பாதுகாத்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்.
தீர்மானம் 4 - மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு கண்டனம்:
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், புகார்தார்கள், புலன்விசாரணை அமைப்புகள், நீதி மன்றங்கள் என அனைவருக்கும் பாதகமான சட்டபிரிவுகளை உள்ளடக்கியது. எனவே, இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு கண்டனம்.
அந்த சட்டங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, அவை நிலுவையில் உள்ளன. இந்த சட்டங்களை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 5 - 2026 தேர்தலில் வெற்றி:
திமுக கூட்டணி கடந்த 2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிப்பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. அதேபோல், 2025-2026 தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றிப்பெற தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது.