கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.14) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 28வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் இன்னிங்சை குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல் ராகுல் ஆகியோர் தொடங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் இந்த முறை 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஹூடா 8 ரன்கள் மட்டும் சேர்த்து ரமன்தீன் சிங்கிடம் கேட்ச்சாகி வெளியேறினார். இதனிடையே சிறிது நேரம் விளையாடிய கேப்டன் கே.எல் ராகுல் 39 ரன்கள் மட்டும் சேர்த்து ஆந்திரே ரஸ்செல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.