சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலிடம் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரிதும் உதவியாக அமையும் என்ற நோக்கில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிய மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.046 கி.மீ தூரத்திற்கு உள்ளடக்கிய, இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. அதாவது, வழித்தடம் 1 ஆனது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் (23.085 கி. மீ) வழித்தடம் 2 ஆனது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் (21.961 km) இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 9.05 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து விமான நிலையம் வரை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
![விமான நிலையம் - கிளாம்பாக்கம் திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலிடம் வழங்கிய சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/tn-che-metrorailnews_14022025172700_1402f_1739534220_534.jpeg)
இரண்டாம் கட்ட விரிவாக்கம் 128 நிலையங்களுடன் 118.9 கி. மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது (i.e) வழித்தடம் 3: மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி.மீ) , வழித்தடம் 4: கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ), வழித்தடம் 5: மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ). இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூபாய் 63,246 கோடி ஆகும். இந்த முன்மொழிவு மத்திய அரசின் செயல்முறை மற்றும் ஒப்புதலின்கீழ் உள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீடிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் திட்டம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சமர்ப்பித்தார்.
திட்ட அறிக்கையில், மெட்ரோ வழித்தடத்தை வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் அமைக்கவும், இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்வது போன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் பின்னர் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ. இந்த வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை: 13. இந்த திட்டத்திற்கு ஆகும் செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட) ஆகும்.
இவ்வாறு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.