சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை எட்டு வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி கூலிப்படையால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பியோடியதாகவும், அவரை பிடிக்கச்சென்ற போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக கூறப்படும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் செப்டம்பர் 22-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்துவரப்பட்ட நிலையில், நீலாங்கரையில் போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பி முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இந்நிலையல் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட 25 பேரில் 15 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் அமர்வில் இன்று (பிப் 14) விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 8 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும், அதனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும்,
மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், பொதுமக்களின் அமைதியே முக்கியம் எனக்கூறி விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.